சென்னை: இணையதள தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் பள்ளி மாணவன் ஏ. அப்துல்கலாம் பேட்டியளித்தார். இதனையடுத்து, மாணவன் அப்துல்கலாம், முதலமைச்சர் ஸ்டாலினை பிப். 24ஆம் தேதி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது அம்மாணவனின் பெற்றோர் ஆ. தில்ஷாத்பேகம் - அ. அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தங்களின் சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்து விட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
பெற்றோரின் வேண்டுகோளை பரிசீலித்த முதலமைச்சர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை இன்று வழங்கினார்.
தலைமை செயலகத்தில், ஒதுக்கீட்டு அணையினை பெற்றுக் கொண்ட மாணவன் ஏ. அப்துல்கலாமின் பெற்றோர் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் எம். கோவிந்த ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் - பெற்றோர் கதறல்