தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “ தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தற்போது உயர்ந்துள்ள கரோனா பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.
அதேபோல், கரோனா மேலும் பரவாமல் தடுக்கப்படுவது, மக்களின் கையில் தான் உள்ளது. தனி மனித இடைவெளி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றினால் கரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே, அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். இந்தியாவிலேயே, நம் மாநிலத்தில் தான் கரோனாவால் இறப்பு விகிதம் 0.67% எனக் குறைந்து காணப்படுகிறது.
நியாயவிலைக் கடைகள் மூலம், பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் உணவுப்பொருள் பற்றாக்குறை இல்லை. இடர்படும் மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மே மாதம் போல ஜூன் மாதத்திலும் நியாயவிலைக் கடைப் பொருட்கள் விலையில்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் “ என்று கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தமிழர்களை மீட்க சிறப்பு விமானம் - ராமதாஸ் கோரிக்கை!