முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் 109 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு, காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், பெருங்குடி உள்ளிட்ட இடங்களில் 6 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையக் கட்டடங்கள், மணலி விரைவு சாலையில் 9 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 100 படுக்கை வசதிகள் கொண்ட நகர்ப்புர சமுதாய மையம், எழும்பூர், வேப்பேரி மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை ஆகிய இடங்களில் 2 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சிறப்பு காப்பகங்கள் என மொத்தம் 18 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மாநகராட்சி கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 210 சிறிய குளங்கள், ஏரிகள், நீரோடைகள், பெரிய மற்றும் சிறிய கால்வாய்கள் ஆகியவற்றில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் மிதக்கும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி கொசு உற்பத்தியை தடுத்திட 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு மினி ஆம்பிபியன் உபகரணம், 6 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் உபகரணம், 7 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு ஆம்பிபியன் உபகரணம் ஆகிய 3 உபகரணங்களுக்கான சாவிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பொங்கலூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்!