சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் துறை சார்பில், 2,368 கோடி ரூபாய் முதலீட்டில் 24,870 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், புதிதாக நிறுவப்படவுள்ள 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அவற்றில், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், CapitaLand நிறுவனத்தால் கட்டப்படும் International Tech Park Chennai என்ற தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைகிறது. இத்திட்டத்தால், 23,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், கடலூர் சிப்காட் தொழிற்பூங்காவில், 350 கோடி ரூபாய் முதலீட்டில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சிலிக்கான் உற்பத்தி திட்டமும், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள மஹிந்திரா தொழிற் பூங்காவில், 105 கோடி ரூபாய் முதலீட்டில், மின்சார மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் உள்ளிட்டவை அமைய இருக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, 3,185 கோடி ரூபாய் முதலீட்டில் 6,955 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும், 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதலமைச்சர் தொக்கி வைத்தார்.
![11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8200670_336_8200670_1595917693814.png)
முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய 8 திட்டங்களில், 6 திட்டங்கள், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும். அதேபோன்று, வணிக உற்பத்தி தொடக்கி வைக்கப்பட்ட 11 திட்டங்களில், 2 திட்டங்கள் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும், 8 திட்டங்கள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட திட்டங்கள் ஆகும்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், தலைமைச் செயலர் க.சண்முகம், தொழில் துறை முதன்மைச் செயலர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற புதிதாக நியமிக்கப்பட்ட கழக நிர்வாகிகள்!