குடியரசு முன்னாள் தலைவர் எஸ். இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5 அன்று, ஆண்டுதோறும் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்துவருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 பேர், நல்லாசிரியர் விருதிற்குத் தேர்வுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள், 10,000 ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும், 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமையாசிரியை இரா.சி. சரஸ்வதி, பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப் ஆகியோர் முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கண்களை தானம் செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர்!