தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வந்தாலும், தலைநகர் சென்னையில் மட்டும் தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை தவிர பிற இடங்களில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். சென்னையில் தொழில் நிறுவனங்கள் இன்றிலிருந்து நிபந்தனைகளுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் மாநிலம் சந்தித்துள்ள பொருளாதார பின்னடைவுகள், மேம்பாட்டு பணிகள் குறித்து ஆராய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழு அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. கரோனாவை தடுப்பதற்காக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, அக்குழுவுடன் நோய்த்தொற்றின் தீவிரம், தடுப்பு, மருத்துவ முறைகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் அவ்வப்போது ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வரும் 31ஆம் தேதியுடன் 4ஆவது கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, சென்னையில் பேருந்து, ஆட்டோ போக்குவரத்திற்கான அனுமதி, பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்கம் செயல்பட அனுமதி உள்ளிட்டவை குறித்து நாளைய ஆலோசனையின் முடிவில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்றாளர்களுக்கு தனிப்பாதை'