கரோனா தடுப்பு குறித்தும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப்பின் மாநிலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. இதுதொடர்பாக 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியுடன் 2 முறை இதுதொடர்பான ஆலோசனையில் கலந்து கொண்டேன். கரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது.
அரசிடம் 2 ஆயிரத்து 501, தனியாரிடம் 870 என மொத்தம் 3 ஆயிரத்து 371 வெண்டிலேட்டர்கள் உள்ளன. 68 ஆயிரம் பி.சி.ஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளன. என்-95 முகக் கவசம், மூன்றடுக்கு முகக் கவசம் உள்ளிட்ட மருத்துவப் பொருள்கள் போதிய அளவிலும், 1 லட்சத்து 95 ஆயிரம் பிசிஆர் கிட்டுகளும் இருப்பில் உள்ளன. இப்போது தான் வேண்டிலேட்டர்கள், உள்ளிட்டவை வாங்கப்படுவதாக சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் தேவையான அனைத்தும் முன்பே நாம் கையிருப்பில் வைத்துள்ளோம்.
இன்று 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 267ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலின் தீவிரத்தை அடிப்படையாக வைத்து 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சிகப்பு வண்ணத்தால் குறிப்பிடப்பட்ட அதிதீவிர பாதிப்புள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்.
அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் சில நாள்களில் பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும். இந்நோயால் ஏழை மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கரோனா தொற்று ஏற்படும் பத்திரிகையாளர்களின் முழு சிகிச்சை செலவையும் அரசே ஏற்கும். கெடு வாய்ப்பாக அவர்கள் இறக்க நேரிட்டால் அரசு அங்கீகார அட்டை வைத்திருக்கும் செய்தியாளர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் முடக்குகின்றன. நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்துள்ள அவர்கள், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற குரல் கொடுக்காமல், இப்படிப்பட்ட நோய் பாதிப்பு நேரத்திலும் அரசியல் செய்கின்றனர்.
ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் குறிப்பிட்ட தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், நடுத்தர மக்களுக்கு சிரமம் இருக்காது. இந்த மாதமும் நியாயவிலைக் கடைகளில் மக்கள் இலவசமாக பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவை 100 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு விலை உயர்வும் தடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது. நிதி வழங்கிய அனைவருக்கும் அரசு சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழக அரசின் கையிருப்பில் இருக்கும் நிதியை பொறுத்துதான் நிவாரணம் வழங்க முடியும்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி வழங்க வேண்டும் - ஸ்டாலின்