சென்னை: 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் நலன் கருதி 40 விழுக்காடு அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஜனவரி 19ஆம் தேதி, 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளி வளாகங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காட்டிற்கும் மேல் மாணவர்களின் வருகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகள் குறித்து தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளைப் பிரித்து நடத்தலாம். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வகுப்புகளை ஒருநாள் விட்டு ஒருநாள் நடத்த வேண்டும்.
மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள், கூட்ட அரங்கம், ஆய்வகங்களில் கூடுதல் இருக்கைகள் போடப்பட்டு வகுப்புகளை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.