புதுச்சேரி சமூக நலத்துறைச் சார்ந்த 36 மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்க கோரியும், துணைநிலை ஆளுநரை சந்தித்து விவாதிக்க நேரம் ஒதுக்க கோரியும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி கடந்த 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவை வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இதுவரை துணைநிலை ஆளுநர் நேரம் ஒதுக்காததை கண்டித்து இன்று காலை தடையை மீறி ஆளுநர் மாளிகை அருகே சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவருக்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே செல்ல முயன்ற முதலமைச்சர் நாராயணசாமியை துணை ராணுவத்தினர், காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதை கண்டித்து, முதலமைச்சர் நாராயணசாமி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். கிட்டத்தட்ட 4 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட முதலமைச்சரிடம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோத்ரா, துணை மாவட்ட ஆட்சியர் சுதாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர் கந்தசாமி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி, அவரை சமாதானம் செய்ததையடுத்து அமைச்சரின் 5 மணி நேர தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "அமைச்சரை சந்திக்காமல் சர்வாதிகாரி போக்கில் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட அமைச்சரை சந்தித்து பேசாமல் கிரண்பேடி அவமதித்துள்ளார். வருகின்ற 21,22 ஆகிய ஏதாவது ஒரு தேதியில் குடியரசு தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்போது, துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முறையிடுவேன். அமைச்சரின் இந்த தர்ணா போராட்டம், இறுதி போராட்டமாக இருக்கும். நிச்சயம் பிரதமர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்ப பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மக்களின் நம்பிக்கையைப் பெற அமைச்சர்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் - நாரயணசாமி