சென்னை: கிண்டி, மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.
ஒன்றரை வருடத்திற்குப் பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் நேசமுடன் இன்முகத்துடன் மாணவர்களை வரவேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 5 மாவட்டங்களைத் தவிர்த்து பள்ளிகளுக்கு வருகை தந்த மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் பூ கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடக்கமாக வேளச்சேரி மேம்பாலத்தை ஆய்வு செய்த பின்னர், மடுவின்கரை சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கு ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு மீண்டும் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி முதலமைச்சர் வரவேற்று வாழ்த்தி உரையாடினார்.
அப்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாடிய முதலமைச்சர், கல்வியில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் செல்லும் அரசு!