சென்னை: தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் டி.என்.ஏ பிரிவின் சார்பில், 'தடய மரபணு தேடல் மென்பொருள் மற்றும் செயலி (Forensic DNA Profile Search Tool) உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.
இந்தச் செயலி மூலம் கடத்தப்பட்ட அல்லது காணாமல்போன குழந்தைகளை மரபணு ஒப்பீட்டு ஆய்வுமூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தல், மாநிலங்களிடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பைக் கண்டறிதல், அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிதல் ஆகியப் பணிகளை விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடியும்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இதை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டடங்களைத் திறந்து வைத்த முதலமைச்சர்
இந்நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், இரண்டு காவல் நிலையங்கள், இரண்டு காவல் துறை கட்டடங்கள், ஆறு உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மூன்று கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய கட்டடத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நிதி ஆதரவுத் திட்டத்தின்கீழ் ஆயிரத்து 148 குழந்தைகளுக்கு நிதி உதவியும், 15 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க: Air Force Rescue: ஹெலிகாப்டர் மூலம் 11 பேரை மீட்ட விமானப்படை