சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ’அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’, ’அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம்’ ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் மொழியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் உள்பட பல்வேறு விதமான காலி பணியிடங்களுக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பயிற்சிப் பள்ளியில் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்ற 24 நபர்கள், பட்டாச்சாரியர்கள் 34 பேர், ஓதுவார்கள் 20 பேர், பரிசாரகர்கள் 17 பேர், நந்தவனம் பராமரிப்பாளர்கள் 25 பேர், எழுத்தர் ஏழு பேர், நாதஸ்வரம் வாசிப்போர் 28 பேர் என மொத்தம் 196 நபர்களுக்கும், கருணை அடிப்படை பணி நியமன அடிப்படையில் 12 பேருக்கும் பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணை, குடும்பநல நிதி உதவி ஆகியவையும் வழங்கப்பட உள்ளது. கடந்த 100 நாள்களில் திருக்கோயிலுக்குச் சொந்தமான 187.91 ஏக்கர் நிலம் உள்பட 625.83 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தவிர, 80 கோயில்கள், 50 திருத்தேர்கள், 30 திருக்குளங்கள் உள்பட கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு தேவையான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் தமிழ் வழியில் அர்ச்சனை திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் மூலமாக 58 நபர்களுக்கு இந்து சமய அறநிலையை துறை சார்பில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு 206 நபர்கள் தமிழ் வழியில் வேதம் கற்ற நிலையில் 2015ஆம் ஆண்டு தமிழ் வழியில் வேதம் கற்றவர்களுக்கு பணி ஆணை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது இத்திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 நாள்களை நிறைவுசெய்யும் ஸ்டாலின் அரசு