சென்னை: ஆவடி வீராபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகள் டானியா முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட குழந்தையாக பார்க்கப்பட்டு வந்தார். இதனால் சிறுமியும், பெற்றோரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் நாசருக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்டார்.
அதன்படி, சிறுமி டான்யா சவீதா மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. 10 மருத்துவர்கள் தொடர்ந்து 10 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அதன்பின் சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு நேரடியாக சென்று சிறுமியிடம் நலம் விசாரித்தார்.
அப்போது சிறுமி மற்றும் அவரது பெற்றோர் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதோடு அங்கிருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.. கட்டுப்பாடுகள் விதித்த ஆசிரியர் தேர்வு வாரியம்