சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.24) நடைபெற்ற நிகழ்வில் ’தீ’ என்னும் அலைபேசி செயலியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், “தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது, ”காக்கும் பணி எங்கள் பணி” என்பதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும் உடைமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள், மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழிவுகள் போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பதும், அவசர உதவி புரிவதும் இத்துறையின் முக்கியப் பணியாகும்.
இத்துறையின் செயல்திறனை மேம்படுத்திட அரசு, பல்வேறு நவீன கருவிகளையும், புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறவும், தீ விபத்து, வெள்ளம், ஆழ்துளைக்கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம், விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் ’தீ’ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்புத் துறையை அணுக முடியும். மக்களிடமிருந்து அழைப்பு வந்த 10 வினாடிக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவி கோரும் இடங்களுக்கு மிகக் குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ’தீ’ செயலியுடன் கூடிய 371 கைக்கணினிகள், அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீக்கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்படுகிறது. ’தீ’ செயலியை மக்கள் தங்களது அலைபேசிகளில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து, விபத்து அல்லது இடர்பாடுகள் ஏற்படும்போது தகவல் தருவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்”என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘தீ’ செயலியுடன் கூடிய கைக்கணிணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் எம்.எஸ்.ஜாபர் சேட்டிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலர் க.சண்முகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரபாகர், காவ ல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் எம்.எஸ்.ஜாபர் சேட், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இணை இயக்குனர் என். ப்ரியா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : புயல் மழை பேரிடரிலிருந்து நம் மக்களைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் - மு.க.ஸ்டாலின்