சென்னை: இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் செஸ் வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு வருகை புரிகின்றனர். இவர்களுக்கு சிறப்பான சேவையை அளிப்பதற்காக, சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள 50 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு ஜூன் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை திறன் வளர்ப்பு மற்றும் கள ஆய்வு பயிற்சி வழங்கப்பட்டது.
அடுத்தகட்டமாக 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "சுற்றுலா நட்பு வாகனம்" திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள 25 ஆட்டோ ஓட்டுநர்களின் விவரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கு சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கும், கனிவாகவும் மரியாதையுடனும் சுற்றுலா பயணிகளுடன் பழகுவதற்கும் புத்தாக்க பயிற்சி மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, இன்று(ஜூலை 26) அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வி.இறையன்பு கலந்து கொண்டு, சுற்றுலா நட்பு வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதத்தையும் எடுத்துக் கூறினார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடர்: நேற்று ஒரே நாளில் 150 வெளிநாட்டு வீரர்கள் வருகை