செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை மகாபலிப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் போட்டியில் கலந்துகொள்ள ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் சாலைகளை பயன்படுத்தி மாமல்லபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளை காவல்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரம் காவல்துறையினர் 17 நாட்கள் சென்னையில் பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதால் அவர்களுக்கு சிறப்புப்படியை வழங்க 2 கோடியே 4 லட்சம் ரூபாய் ஒதுக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
குறிப்பாக நபர் ஒன்றுக்கு தினமும் 300 ரூபாய் வீதம் மொத்தம் 2.4 கோடி வழங்க கோரப்பட்டது. இந்நிலையில் நாளொன்று 250 ரூபாய் வீதம் சிறப்புப்படி வழங்கக்கூறி தமிழ்நாடு அரசு சார்பில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புப்படிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் காவலர்கள் பணிக்கான சான்றிதழ்களை 17 நாட்களுக்கு பின் வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உயரதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டம்...