சென்னை: விருகம்பாக்கம் தனியார்ப் பள்ளியில் பேருந்து மோதி 2ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் மீது எந்த தவறும் இல்லை எனப்பள்ளி நிர்வாகம் பதில் கூறிய நிலையில், அது குறித்து விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை - விருகம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வாகனத்தில் சிக்கி 2ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து, பொறுப்புப் பணியாளரை நியமிக்காதது ஏன், வயதானவரை ஓட்டுநராக நியமித்தது ஏன், வேகத்தடை அமைக்கப்படாதது ஏன், பள்ளி முதல்வர் கவனிக்கத்தவறியது ஏன், உடற்கல்வி ஆசிரியருக்குப் பதிலாகப் பொறுப்பாளரை நியமிக்காதது ஏன், தாளாளர் பிற்பகல் வரை பள்ளிக்கு வராதது ஏன் என்பது உள்ளிட்ட 6 கேள்விகளுக்குப் பதில் அளிக்க 28ஆம் தேதி பிற்பகலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்த நோட்டீஸிற்கு 29ஆம் தேதி பள்ளி சார்பில் பதில் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதில் விளக்கத்தில், பொறுப்புப் பணியாளர் நியமிக்கப்பட்டதாகவும், வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை சரியாக இருந்ததாகவும், உடற்கல்வி ஆசிரியருக்குப் பதிலாகப் பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டதாகவும், பள்ளி முதல்வர் அனைத்தையும் கண்காணித்ததாகவும்,தனியார்ப்பள்ளி தரப்பில் தாங்கள் சரியாகச் செயல்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநரிடம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சமர்ப்பித்துள்ளார். பள்ளி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரிதானா ?, கண்காணிப்புக்குழு பொறுப்பாசிரியர் நியமனம் எனப்பள்ளிகள் தரப்பில் சரியாகச் செயல்பட்டதாக விளக்கத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், பள்ளி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் உள்ள தகவல்கள் உண்மைதானா என்பதை மீண்டும் கல்வித்துறை அலுவலர்களை நியமனம் செய்து விசாரணை செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு பள்ளியில் கொடுமை; குழந்தைகளை கழிவறை சுத்தப்படுத்த வைக்கும் ஆசிரியை!