சென்னை: 2020ஆம் ஆண்டு கரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் முந்தைய ஆண்டைவிட அபராத வசூலில் இருமடங்கு வருவாயை சென்னை போக்குவரத்து காவல் துறை ஈட்டியுள்ளது.
2019ஆம் ஆண்டு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 33.39 கோடி ரூபாய் இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் மட்டும் சென்னை காவல் துறையில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 66.31 கோடி ரூபாய் எனக் காவல் துறை தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும்
கடந்த ஐந்து ஆண்டுகளைக் கணக்கிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை போக்குவரத்து காவல் துறையால் விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, 2016ஆம் ஆண்டு ரூ. 24.13 கோடி இருந்த அபராத வசூல் 2017இல் ரூ. 25.58 கோடியாகவும், 2018இல் ஆண்டு ரூ. 27.83 கோடியாகவும், 2019இல் 33.39 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும்
அதேபோல, மாநிலம் முழுவதிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது 2019ஆம் ஆண்டு 165.81 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் 31.66 விழுக்காடு அதிகரித்து ரூ. 52.51 கோடி அதிக வருவாய் ஈட்டியதுடன், 218.32 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்காகக் காவல் துறையால் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையானது 101.43 கோடி ரூபாய் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு 50 விழுக்காடு அதிகரித்து 155.60 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், 2018ஆம் ஆண்டு 118.18 கோடியாக குறைந்து, அடுத்த 2019, 20ஆம் ஆண்டுகளில் முறையே மீண்டும் அதிகரித்து முறையே 165.81 கோடி ரூபாய், 218.32 கோடி ரூபாய் அபராதப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தலைமையகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்ட கேள்விகளுக்கு காவல் துறை தலைமையகம் இந்தப் பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வைரல் வீடியோ: மேடையில் சினிமா பாடல் பாடிய ஐஜி சுதாகர்