சென்னை:சென்னையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோர் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 38-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் சாகசம் மற்றும் ரேஸில் ஈடுபட்டதற்காக சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள 11 இளைஞர்களுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசர விபத்து சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற நூதன முறையிலான தண்டனையை உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது.
நூதன நடைமுறை:இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக பைக் சாகசம் மற்றும் ரேஸில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இளைஞர்களிடம் சென்னை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறை பிணை பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக ரவுடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து ஜாமீனில் வெளியே வந்தவுடன், மீண்டும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி நன்னடத்தை மீறக்கூடாது என்பதற்காகப் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது வழக்கம்.
ஆனால், தற்போது பைக் வீலிங் செய்யும் இளைஞர்களிடம் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் நடைமுறையைச் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். பெசன்ட் நகரைச் சேர்ந்த சரவணன், ஒக்கியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த லியாகத் ரகுமான், எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த பிரேம் சந்திரன் ஆகிய 4 பேரிடம் போக்குவரத்து காவல்துறை அறிவுரைப்படி அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையர் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர்.
பத்திரத்தை மீறினால் 6 மாத சிறை: பிரமாணப் பத்திரத்தை மீறி மீண்டும் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நேரடியாகச் சிறையில் அடைக்கப்படுவார்கள் என சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இவ்விவகாரத்தில் நன்னடத்தையை மீறினால் துணை ஆணையரே, 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு சிறையில் அடைப்பதற்கான அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'வார்டு பாய்களுக்கு 1 மாதம் ஹெல்ப் பண்ணுங்க' - பைக் ரேஸ் இளைஞருக்கு பலே தீர்ப்பு