காவலர்கள், புகார் அளிக்கவரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பட்டது. அதனை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று (பிப். 22) திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் குமார் அகர்வால், "பொதுமக்கள், காவலர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கெனவே சென்னை மவுண்ட் காவல் நிலையம், புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானம் ஆகிய பகுதிகளில் ஆவின் பாலகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சென்னையில் உள்ள ரவுடிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.
மேலும், சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
இதையும் படிங்க...’வெற்றி நடைபோடும் தமிழகம்’-க்கு செலவு ரூ.64 கோடி மட்டுமே என அரசு தகவல்!