சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளைத் துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுவால் விதிக்கப்படுகிறது.
இக்குழுவினரால் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 15 மண்டலங்களில் 624 நிரந்தரக் கட்டுமானங்களுடன் கூடிய ஆக்கிரமிப்புகள் மற்றும் 1,457 தற்காலிகக் கூடாரங்கள் போன்ற ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 2,081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, 1,290 மெட்ரிக் டன் அளவிலான கட்டடக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மழைநீர் வடிகால்களிலிருந்து 606 கழிவுநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, பொது இடங்களில் கட்டடக் கழிவுகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், மழைநீர் வடிகால்களில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: VIDEO:நெல்லை ராதாபுரத்தில் பற்றி எரியும் காற்றாலை