சென்னையில் இன்று தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”2019 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பதிவான மழையளவு 454 மில்லி மீட்டராகும்.
இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 447 மிமீ. இது இயல்பைவிட இரண்டு விழுக்காடு அதிகமாகும். கடந்த ஆண்டு 24 விழுக்காடு இயல்பைவிட குறைவாக மழை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஆறு மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 22 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், ஐந்து மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 64 விழுக்காடு இயல்பைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இயல்பைவிட 28 விழுக்காடு குறைவாக உள்ளது.
புயல்களைப் பொறுத்தவரை 2019ஆம் ஆண்டு 8 புயல்கள் உருவாயின. இதில் மூன்று வங்கக்கடல் பகுதியிலும், ஐந்து புயல்கள் அரபிக்கடல் பகுதியிலும் உருவானது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் அதிகமான புயல்கள் உருவாயின“ என்று கூறினார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளது எனவும் அடுத்து வரும் நான்கு நாள்களுக்கு தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.
சென்னையைப் பொறுத்தவரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனக்கூறிய அவர், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஆண்டு அளவைப் பொறுத்தவரை சென்னையில் மழையின் அளவு 17 விழுக்காடு குறைவு எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு!