சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும், உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அதனைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, புதுவை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், குமரிக்கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்' என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: அரபிக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்: இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை!