கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று சில தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. அதன்படி, கட்டுமானப் பணி, சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 25 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதியும், 10 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் செயல்பட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
அனைத்து தனிக்கடைகள், ஹார்டுவேர், மின்பொருள் கடைகள், அலைபேசி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர பெரும்பாலானக் கடைகள் திறக்கப்படவில்லை. நீண்ட நாட்களாக கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் பலரும் மிக்சி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக சாதனங்கள், கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றுக்குத் தேவையான சாதனங்கள், வைஃபை ரூட்டர் போன்ற வீட்டிலிருந்தே பணிபுரியத் தேவையான மின்சாதன பொருட்கள் என பல தேவைகளுக்காக கடைகளைத் தேடினர். ஆனால், பல இடங்களில் கடைகள் திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னையில் மின்சாதனப் பொருட்கள் வாங்க முக்கியச் சந்தையான ரிட்சி தெரு முகப்பில் தடுப்புப் போடப்பட்டுள்ளது. தியாகராய நகர்ப் பகுதியில் பிரபல தனியார் பல்பொருள் அங்காடியான பிக் பஸார் திறக்கும் முன்பாகவே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், மால்கள், வணிக வளாகங்களில் இருக்கும் பெரிய கடைகளைத் திறக்க அரசு அனுமதி வழங்காத நிலையில், கடையை காவல் துறையினர் அடைத்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு சில இடங்களில் செருப்புக் கடைகள், கண்ணாடிக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வையடுத்து 40 நாட்களாக வீட்டில் முடங்கியிருந்த மக்கள் இன்று சாலைகளிலும், கடைகளிலும் பெருவாரியாக கூடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 20 விழுக்காட்டிற்கும் குறைவான அளவு மக்களே சாலைகளில் சென்றனர். மாநநகரில் இன்று முதல் போக்குவரத்து சிக்னல்களும் செயல்படத் தொடங்கியுள்ளன.
தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டாலும் பெரும்பாலானவை இயங்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய வலியுறுத்தியுள்ளன.
அதேபோல், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவை மாலை 5 மணி வரை செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் உள்ள இதுபோன்ற கடைகளில் மக்கள் போதிய தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: தனியார் கல்லூரிக்கு தொடர்ந்து மாற்றப்படும் கரோனா நோயாளிகள்!