சென்னையில் நேற்று இடைவிடாமல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆலந்தூர் தொகுதி உட்பட்ட எம்.கே.என் நகர்ப் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாகச் சாலையில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது.
இப்பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள், வேலைக்குச் செல்வோர் என அனைவரும் அப்பகுதியில் உள்ள தார்ச்சாலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பெய்த கனமழையில் இப்பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் முட்டளவு தண்ணீரில் இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு செல்கின்றனர். பலர் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு வெள்ளம் வடிந்த பின் செல்லலாம் என ஒதுங்கி நின்றனர். ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியபடி நின்றன.
மேலும் பாதசாரிகளும் சிரமத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனர். சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையானது குண்டும், குழியுமாக உள்ளது.
எனவே இனி மழைக் காலம் என்பதால் உடனடியாக சாலையைச் சீர்செய்து வேறு சாலையை அமைக்க வேண்டும் என ஆலந்தூர் நகராட்சி நிர்வாகத்துக்குப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.