சென்னை: ‘நிவர்’ புயலையடுத்து வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், அது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'நிவர்' புயலால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களிலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுவை, காரைகால் பகுதியிலும் கடந்த மூன்று நாள்களில் கன மழை பெய்தது. கடலூர், புதுவை மற்றும் காரைகாலில் பலத்த காற்று வீசி மரங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டது.
இச்சூழலில் வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், அது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 2 ஆம் தேதி தென் தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக 28.11.2020, 29.11.2020 ஆகிய தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 30.11.2020 அன்று தென்தமிழகம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், 01.12.2020 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) மேட்டுப்பட்டி (மதுரை) 9, அவிநாசி (திருப்பூர்) 8, வாடிப்பட்டி (மதுரை), சோழவந்தான் (மதுரை) தலா 7, ஆண்டிபட்டி (தேனி), வத்ராயிருப்பு (விருதுநகர்), திருப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நிவர் புயலின் தாக்கம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இணைப்பை சொடுக்கவும்
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் நவம்பர் 28 தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நவம்பர் 29 தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் , தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலும், நவம்பர் 30 தெற்கு வாங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், டிசம்பர் ஒன்றாம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று விசக்கூடும்.
மேலும், டிசம்பர் 2ஆம் தேதியில், தென்மேற்கு வங்கக் கடல் தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள். மாலத்தீவு மற்றும் லத்தச்சத்தீவு பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆழ் கடல் பகுதிக்கு டிசம்பர் 2 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.