சென்னை ஐஐடியில் சமூக திட்டத்தின் கீழ் உயர்கல்வி நிறுவனங்களில் சேர பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுவது, எளிய முறையில் அறிவியல் தொழில் நுட்பத்தை கற்பிப்பது, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு பணிகளை செயல்படுத்திவருகின்றனர். அதேபோல் ஐஐடி மாணவர்கள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு அறிவியல் பாடத்தினை தொழில்நுட்பத்துடன் கற்பிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஐஐடி இணைப் பேராசிரியர் அனுராதா கூறும்போது, ” சென்னை ஐஐடியில் எம்எஸ், எம்.டெக், பிஹெச்டி படிக்கும் மாணவர்களை குழுக்களாக பிரித்து, அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு மாணவர்கள் குழு நேரில் சென்று, அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எவ்வாறு பழுது பார்ப்பது, அதில் பயன்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பம் என்ன என்பது குறித்து கற்றுத் தரப்படுகிறது.
ஆண்டிற்கு ஆறுமுறை இவ்வாறு பள்ளிகளுக்குச் சென்று ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிப்பதால், தொழில்நுட்பத்தை அறிவியல் சார்ந்து மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். மாணவர்களை குழுவாக பிரித்து கற்பிப்பதால் அவர்கள் பிறருக்கும் கற்றுத்தருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 அரசுப் பள்ளிகளில் சுமார் 800 மாணவர்கள் இதுபோன்ற தொழில்நுட்பத்தை கற்றுள்ளனர். மாணவர்கள் தொழில்நுட்பத்தை அறிவியலோடு படிப்பதால் எளிதில் புரிந்துகொள்வதுடன், அதன் மீது அவர்களுக்கு ஆர்வமும் ஏற்படுகிறது.
உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்கள் சென்று கற்பிப்பதால் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் 15க்கும் மேற்பட்டப் பள்ளிகளில் இத்திட்டத்தினை விரிவுபடுத்த உள்ளோம். ஆசிரியர்களும் அறிவியல் தொழில்நுட்பத்துடன் மாணவர்களுக்குக் கற்றுத்தருவது குறித்து ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்து கொள்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவிகளைச் சோதனை செய்ய ஆசிரியர்களுக்குத் தடை!