போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இரண்டு கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்தியக் குற்றபிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. தலைமறைவான செந்தில் பாலாஜி தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, தேவைப்படும் போது மத்தியக் குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தினமும் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நேரில் ஆஜராக காவல் துறை தரப்பில் சம்மன் கொடுத்த தினமே உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது குறித்து விளக்கம் கேட்டு காவல்துறை சார்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.
முறையீட்டை ஏற்ற நீதிபதி ஆதிகேசவலு, செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமின் வழங்கி பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்வது தொடர்பாக காவல்துறை மனுத் தாக்கல் செய்யலாம் என்றும், முன் ஜாமின் வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்யும் வரை செந்தில் பாலாஜி பிணைத் தொகை செலுத்த அவசியமில்லை எனவும் உத்தரவிட்டார்.
மேலும், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த விவகாரத்தில், பிப்ரவரி 14ஆம் தேதி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்த நாள் விழா - சேவல் சண்டைக்கு அனுமதி கோரி மனு!