சென்னை: தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டுச் சங்கம் தன்னை அனுமதிக்கவில்லை எனக் கூறி வட்டெறிதல் வீராங்கனை நித்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களின் பதிவை ஆன்லைன் மூலமாக மேற்கொள்ள வேண்டும்,
பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு
தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி மகாதேவன், இதுபோன்ற விளையாட்டு சங்கங்களை முறைப்படுத்த எந்த ஒரு சட்டமும் இல்லை என்றும், வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய இந்த விளையாட்டுச் சங்கங்களை முறைப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு விளையாட்டுச் சங்கத்தின் செயல்பாடுகளையும் முறைப்படுத்துவதற்கான சட்டவிதிகளை வகுப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டுமெனவும், அவற்றை அரசிடம் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
குறை தீர் பிரிவு
இதுபோன்ற சங்கங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சங்கங்களின் நிதிநிலை உள்ளிட்ட விவரங்களை மாநில அரசிடம் வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டுமெனவும், தகுதியான விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாதது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தனி குறைதீர் பிரிவை ஏற்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் சங்கங்கள் அமைப்புகளில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், முக்கிய நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களாக இருத்தல் வேண்டுமெனவும், குறைந்தபட்சம் 75 விழுக்காடு உறுப்பினர்கள் விளையாட்டு வீரர்களாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.
விளையாட்டு சங்கங்களுக்கு நிதி உதவி வழங்கினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு நிர்வாகிகள் பதவிகள் வழங்கக் கூடாது என்றும்,
ஆன்லைனில் வெளியிட உத்தரவு
மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்வதோடு, இந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை, செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றையும் ஆன்லைனில் வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு சங்கமும் தனித் தனியாக இணையதளம் ஆரம்பித்து, சங்கத்திற்கு வந்த நிதியுதவி குறித்த விவரங்களை ஆன்லைனில் வெளியிட வேண்டும் எனவும், தகுதியற்ற விளையாட்டு வீரர்கள் யாரேனும் போட்டிகளுக்குத் தேர்வுசெய்யப்பட்டார்கள் எனத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட சங்கத்தை இரண்டு ஆண்டுகளுக்குத் தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு, ஊக்க மதிப்பெண் வழங்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம்