சென்னை: வனப்பகுதிகளை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் வாகனங்கள் மோதி உயிரிழப்பது தொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வில் இன்று (ஜன.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை செயலாளர் தீரஜ்குமார், தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உள்ளிட்ட அலுவலர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை செயலாளர், “சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் பண்ணாரி - திம்மம் சாலையில் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019இல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் கர்நாடகாவை இணைக்கும் இந்த சாலையில் 17 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார். பின்னர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, “இந்த சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களுக்கும், இரவு 9 மணி முதல் 6 மணி வரை இதர வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அவசரம் உள்ளிட்ட காரணங்களை கூறி இந்த தடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவ அவசரம், உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்டவர்களுடன் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் கூட்டம் நடத்தி, பின்னர் 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், வனப்பகுதி சாலைகளில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கேமராக்களை பொருத்தி, அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கலாம் எனவும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.