சென்னை: சென்னை மாவட்டம் ராஜகீழ்பாக்கம் அருகே வசித்து வருபவர் மோகன்தாஸ். இவர் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து தற்போது சென்னையில் அவருடைய மகள் ரேகா என்பவருடன் வசித்து வருகிறார்.
போலிக் காவல் ஆய்வாளராக அறிமுகம்
ரேகா திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனை அறிந்த, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சிவாஜி சிவகணேசன் என்ற சந்திரசேகர் (42) என்பவர் ரேகாவின் தந்தை மோகன்தாஸை சந்தித்து, தான் காவல்துறையில் சிறப்புப் புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிவதாகவும், கணவனைப் பிரிந்து வாழும் உங்கள் மகள் ரேகாவையும் மறுமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார்.
![கைது செய்யப்பட்டவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-moneycheating-accusedarrest-photo-script-7208368_02012022135410_0201f_1641111850_947.jpg)
அதுமட்டுமில்லாமல், ரேகாவின் விவாகரத்திற்குத் தேவையான ஏற்பாடுகளையும் தானே செய்து தருவதாகக் கூறியுள்ளார். கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மோகன்தாஸிடமிருந்து 85 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும், அவரது காரையும் வாங்கியுள்ள சந்திரசேகர், திடீரென தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து, அவரைப் பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியாததால் அதிர்ச்சி அடைந்த மோகன்தாஸ், அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பணத்திற்காக நாடகம் ஆடியது அம்பலம்
தலைமறைவானவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். சென்னையில் பதுங்கியிருந்த சந்திரசேகரைக் கைது செய்த காவலர்கள், அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிவாஜி கணேசன் (எ) சந்திரசேகர், ஏற்கனவே திருமணமானவர் என்பதும் மனைவி, மகள், மகனுடன் கோயம்புத்தூரில் வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மோகன்தாஸ் வெளிநாட்டில் வேலை செய்து அதிக அளவில் பணம் வைத்திருப்பதால் அவரிடம் மோசடி செய்து பணத்தை ஏமாற்றவே இதைச் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வசூல்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்