சென்னை: தமிழ்நாட்டில் பொது மக்களிடம் முதலீடுகளை பெற்று, ஒவ்வொரு மாதத்திற்கும் அதிக வட்டி தருவதாகக் கூறி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வரை மோசடி செய்த நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்படி, சில தினங்களுக்கு முன்பு 'ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம்' 1 லட்ச ரூபாய் முதலீட்டிற்கு மாதம் ரூ.30,000 தருவதாகக் கூறி, சுமார் 90,000 பேரிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது. இதைக் கண்டுபிடித்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அந்நிறுவனத்துடன் தொடர்புடைய 8 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், சுமார் ரூ.2,125 கோடிக்கு மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வட்டி ஆசையூட்டும் பைனாஸ் நிறுவனங்கள்: இதேபோன்று வேலூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட 'இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ்' என்ற நிறுவனம், 1 லட்ச ரூபாய் முதலீட்டிற்கு மாதம் 8,000 ரூபாய் தருவதாகக் கூறி, சுமார் ஒரு லட்சம் பேரிடம் ரூ.6,000 கோடிக்கு முதலீடுகளைப் பெற்று மோசடி செய்த வழக்கில் 5 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்த தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றன.
ஒருவரின் முதலீடே;மற்றொருவருக்கு வட்டியாகும்: இதேபோல, திருச்சியை தலைமையாகக் கொண்ட 'எல்பின் இ காம்' என்ற நிறுவனம், 5,000 பேரிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.500 கோடிக்கு மோசடி செய்த விவகாரத்திலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 3 நிறுவனங்களின் மெகா மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் இன்று (ஆக.10) செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், இந்த மோசடி நிறுவனங்கள் பான்சி ஸ்கீம் (PONZI Scheme) என்ற முறையின் அடிப்படையில் முதற்கட்டமாக குறிப்பிட்ட நபர்களிடம் முதலீடுகளை வசூல் செய்துவிட்டு, அவர்களுக்கு 2ஆம் கட்டமாக வசூல் செய்யும் நபர்களிடமிருந்து பெறப்பட்ட தொகையை வட்டியாகக் கொடுத்து மோசடி மேற்கொண்டு வந்ததைப் பொருளாதார குற்றப்பிரிவினர் கண்டுபிடித்தனர்.
வரம்பு மீறும் வட்டி - நிறுவனங்கள் மீது பாயும் நடவடிக்கை: குறிப்பாக, மத்திய அரசின் 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முறைப்படுத்தப்படாத வெளியீடுகள் தடுப்புச் சட்டம் திருத்தம் அடிப்படையில் குறைந்தபட்சம் 5.5% லிருந்து அதிகபட்சமாக 12% வட்டி விகிதங்களை தாண்டி முதலீடுகளைப் பெற்று பொதுமக்களுக்கு வட்டி கொடுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
மொத்தமாக ரூ.8265 கோடி மோசடி: இதனடிப்படையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையில் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ், எல்பின் இ காம் நிறுவனம் ஆகியவை மொத்தமாக, ரூ.8265 கோடி அளவில் பொதுமக்களிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்ததைத் தொடர்ந்து, இந்நிறுவனங்களின்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணத்தை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையில், பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.85 கோடியையும், ரூ.150 கோடி அளவிலான சொத்துக்களை அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேபோல, எல்பின் இ காம் நிறுவனம் தொடர்பான ரூ.100 கோடி சொத்துக்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மோசடி செய்தவர்களுக்கு 'லுக் அவுட் நோட்டிஸ்': ஆருத்ரா கோல்ட் டிரேடிங், இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ், எல்பின் இ காம் நிறுவனம் தொடர்புடைய வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் சிலர் மீது 'லுக் அவுட் நோட்டிஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த 3 நிறுவனங்களின் வங்கி கணக்குகள், முதலீடுகள், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அடையாளம் கண்டறிந்து, அவற்றை முடக்கிப் பின், TNPID நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு, இதனிடையே இந்த 3 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களின் ஆவணங்களை சரிபார்த்து பணம் திருப்பிக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று, ரூ.20 கோடிக்கும் மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றின் மூலம் சுமார் ரூ.1162 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ரீதியாக உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கும் பணியில் ஈடுபட்டு ரூ.250 கோடி அளவில் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு நிறுவனமே பணத்தை சரியாக தந்துவிடும்.. வாடிக்கையாளர்கள் விரக்தி!