சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள சரக்ககப்பிரிவிலிருந்து வெளிநாட்டிற்கு போதை பொருள்கள் கடத்தப்பட இருப்பதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள், சுங்க இலக்கா அலுவலர்களுடன் இணைந்து சரக்ககப்பிரிவில் இருந்த பார்சல்களை ஆய்வு செய்தனர். இதில் ஆஸ்திரேலியாவிற்கு எடுத்து செல்வதற்காக சீரக உருண்டை என்ற ஒரு பார்சல் இருந்துள்ளது.
அந்த பார்சல் மீது சந்தேகம் கொண்ட அலுவலர்கள், அதனை ஆய்வுக்கு அனுப்பினர். ஆய்வில் அவற்றில் ஒபியம் என்ற போதை பொருள் இருந்துள்ளது. ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் விளையக்கூடிய பொருள் எனவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இந்த பார்சலில் இருந்த முகவரியை வைத்து ஒபியம் போதை பொருளை அனுப்பியவரை தடுப்பு பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர்.
இந்த ஒபியத்தின் மதிப்பு 2 கோடி எனவும், 16 கிலோ 465 கிராம் எடையுள்ளது எனவும் தெரிவித்தனர். இதேபோல ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருந்த மற்றொரு பார்சலை பிரித்த போது படிக துாள் பாக்கெட்டுகள் இருந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்தபோது எபித்தீன் என்ற போதை பொருள் என தெரியவந்துள்ளது. அவற்றின் மதிப்பு ரூபாய் 7 லட்சம் எனவும், 4 கிலோ 785 கிராம் எடையுள்ள அந்த போதை பொருளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த போதை பொருளை அனுப்பியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:'ஆன்லைன் வர்த்தகத்தால் கலப்பட பொருள்கள் அதிகம் உருவாகலாம்' - வணிகர் சங்கத்தினர் கருத்து