சென்னை: சமூக இடைவெளியை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என்று அரசும், உலக சுகாதார மையமும் அறிவுறுத்தியிருந்தும், அதனை கணக்கில் கொள்ளாமல் மக்கள் கூட்டமாக கடைகளுக்கு பொருள்கள் வாங்க வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் கரோனா பாதிப்பில் 6ஆவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் தமிழ்நாட்டில் கரோனா பரவல் 3ஆம் கட்டத்தை அடையாமல் தடுக்க மாநில அரசு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளுக்கும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களுக்கும் நான்கு நாள்கள் முழுமையான ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி - அமைச்சர் விஜயபாஸ்கர்
கரோனா தடுப்பு நடவடிக்கையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக சாலைகளில் சாரைசாரையாக கடைக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
கூட்டமாக பொதுமக்கள் கடைகளுக்குச் சென்று சமூக இடைவெளி பின்பற்றாமல் பொருள்களை வாங்குவதால், நோய்தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், இதுபோன்ற நேரத்தில் மக்கள் அதனை மறந்து, இயல்பான வாழ்க்கை என்று நினைத்து, தொற்று பரவ காரணமாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.