பிரபல செய்தி வாசிப்பாளரும், நாடக கலைஞருமான வரதராஜன் நேற்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினர் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி தராமல் அலைகழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இந்த வீடியோவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் பொய்யான குற்றச்சாட்டை கூறிய வரதராஜன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்ததோடு, வரதராஜன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தது.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வரதராஜன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.