சென்னை: முதல் 15 நாட்களில் (அக்டோபர் 1-15) 63.86 கோடி ரூபாய் சொத்து வாரியாக மாநகராட்சி வசூலித்துள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் முதல் அரையாண்டு வரி, அக்டோபர் முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு வரி என மாநகராட்சி வசூலித்துவருகிறது. முதல் அரையாண்டு தொடக்க காலமான ஏப்ரல் 1 முதல் 15ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு தொடக்க காலமான அக்டோபர் 1 முதல் 15ஆம் தேதிக்குள்ளும் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி தொகை செலுத்தப்படாமல் இருந்தால், செலுத்தப்பட வேண்டிய நிகர சொத்துவரி தொகையுடன் (கல்வி வரி, நூலகத் தீர்வை தவிர்த்து) கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு விழுக்காடு மிகாமல் தனிவட்டியுடன் தண்டத் தொகையாக விதித்து வசூலிக்கப்படும்.
அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி தொகையினை செலுத்தும் சொத்து உரிமையாளருக்கு, செலுத்தப்படும் நிகர சொத்து வரியில் (கல்வி வரி, நூலகத் தீர்வை தவிர்த்து) ஐந்து விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.5000/-வரை) ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் முதல் மார்ச் இரண்டாம் அரையாண்டு வரி அக்டோபர் 1-15 தேதிக்குள் 92ஆயிரம் நபர்கள் சொத்து வரி செலுத்தியுள்ளனர். மொத்தம் ரூ.63.86 கோடி மாநகராட்சி வசூலித்துள்ளது. முதல் அரையாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 159.12 கோடி வரி வசூலித்துள்ளது. அதேபோல் தொழில் வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அரையாண்டு வரி மொத்தம் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 1-15 தேதிக்குள் 33,181 நபர்கள் சொத்து வரி செலுத்தியுள்ளனர். மொத்தம் 38.37 கோடி மாநகராட்சி வசூலித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஊக்கத்தொகை தருவதும் மாநகராட்சி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான் காரணம் என மாநகராட்சி அலுவலர் கூறுகின்றனர்.
மாநகராட்சி 2020இன் அரையாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மொத்தம் அனைத்து வரியும் சேர்த்து 159 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.607.38 கோடி வசூல் செய்துள்ளது. கடந்த ஆண்டு வரி தொகை குறைந்ததால், இந்த முதல் அரையாண்டு வரி கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் அரையாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் 737 புதிய உரிமம் மாநகராட்சி வழங்கியுள்ளது.
மேலும், மாநகராட்சி வருவாய் மதிப்பீடு மற்றும் பெருக்குதல் பணி (GREAT League) என்ற ஒரு திட்டத்தை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் தங்களது வரி வசூல் தொகை இலக்கை சரியான நேரத்தில் வசூல் செய்தவர்களுக்கு பாராட்டும், சான்றிதழும் வழங்கப்படும். இது தொடர்பாக நம்மிடம் பேசிய துணை ஆணையர் மேகநாதன் ரெட்டி "15 மண்டலங்களை 15 அணியாக பிரித்துவிட்டோம். ஒவ்வொரு மாதமும் தங்களது இலக்கை உரிய நேரத்தில் முடித்த முதல் மூன்று மண்டலங்களுக்கு (சொத்து வரி, தொழில் வரி, வர்த்தக உரிமம்) மற்றும் மூன்று ஊழியர்களுக்கு (வரி வசூல் செய்பவர், மதிப்பீட்டாளர்கள், உரிம ஆய்வாளர்) பாராட்டும் சான்றுதழும் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.