சென்னை: மத்திய சென்னை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நகர் ஆகியப் பகுதிகளில் இன்று தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால், சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காட்சியளித்தது.
மேலும், பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை நீர் தேக்கத்தை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து சரி செய்து வருகின்றனர்.
சென்னை ரிப்பன் மாளிகை - தேங்கிய மழைநீர்
இன்று நவ.07ஆம் தேதி காலை முதலே கனமழை பெய்து வருவதால், சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், அதிக அளவில் மழைநீர் தேக்கமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி வளாகமான ரிப்பன் மாளிகையில், மழைநீர் அதிக அளவில் தேக்கத்துடன் காணப்பட்டது. கால்வாயில் ஏற்பட்ட அடைப்புக் காரணமாக தேங்கிய மழைநீர், வெளியேற முடியாமல் ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள்ளேயே நிரம்பி உள்ளது.
முழங்கால் அளவு மழைநீர்
அதுமட்டுமில்லாமல் ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள், பல்வேறு இடங்கள் தாழ்வாக உள்ளதால் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் அங்கேயே தங்கும் அவலம் நீடித்து வருகின்றது. இதனால், முழங்கால் அளவு மழைநீரானது தேங்கியுள்ளது.
மேலும், அங்கு பணிகளுக்கு வரும் அலுவலர்கள் உள்பட பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை – முதலமைச்சர்