சென்னை: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து, அவர்களைத் தனிமைபடுத்துதல், மருத்துவமனைகளில் அனுமதிப்பதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் நாள்தோறும் சராசரியாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சந்தைகள், அரசு, தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரிபவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுழற்சி முறையில், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மே மாதம் 7ஆம் தேதி முதல் நேற்று வரை 23 லட்சத்து 86 ஆயிரத்து 986 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த சுழற்சி முறையில் ஆர்டிசிபிஆர் பரிசோதனைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு