ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரை நேரில் அணுகுவதையோ அல்லது மருத்துவமனைக்கு நேரில் செல்வதையோ தவிர்க்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி, தனுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க 'GCC Vidmed' என்ற செயலியை உருவாக்கியுள்ளது.
இச்செயலியைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையை அதற்குரிய மருத்துவரிடம் காணொலி மூலம் 24 மணி நேரமும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இதில், கரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் உள்ள நபர்கள் செயலி மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர் கேட்டறிந்து அவருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய வேண்டி இருப்பின் உடனடியாக குறுஞ்செய்தி தொலைபேசி அழைப்பு மையத்துக்கு அனுப்பப்படும்.
![GCC Vidmed launch](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04a-corporation-medical-app-visual-image-7209208_12052020170836_1205f_1589283516_1097.jpeg)
பின்னர், தொலைபேசி அழைப்பு மையத்திலிருந்து சம்பந்தப்பட்ட மண்டல மருத்துவ அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு குறிப்பிட்ட அந்த நபருக்கு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், முதியோர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் தங்களுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சையை எந்தவித சிரமமுமின்றி வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், ஆணையர் பிரகாஷ் ஆகியோர் 'GCC Vidmed' செயலியை அம்மா மாளிகையில் இன்று தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன், இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, தனுஷ் ஹெல்த்கேர் நிறுவன ஆலோசகர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்