சென்னை: கொளத்தூர் - வில்லிவாக்கம் மேம்பாலம் அமைக்கும் பணி திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-65 மற்றும் அண்ணாநகர் மண்டலம், வார்டு- 95, 96 ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
வில்லிவாக்கம் சந்திக்கடவு எண்-1க்கு மாற்றாக வடக்கில் கொளத்தூர் பிரதான சாலையையும், தெற்கில் ஐசிஎஃப் (ICF - ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை) சாலையையும் இணைக்கும் வண்ணம் இருவழி மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.61.98 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ஐசிஎஃப் நிலம்
இதற்கு அரசின் நிர்வாக அனுமதி பெற்று, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம், கொளத்தூர் பகுதியை அண்ணாநகர் பகுதியுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாகும்.
ஐசிஎஃப் பகுதியில் இப்பாலத்திற்கு தேவையான நிலங்கள், ஐசிஎஃப் நிறுவனத்திடமிருந்து பெற்று, அப்பகுதியில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே பகுதியில், ரயில்வே துறையால் பணிகள் கடந்த வருடத்தில் முடிக்கப்பட்டது.
மூன்று முறை அறிவிப்பு
இந்த மேம்பால பணிக்கு இடையூறாக, ஒன்பது பட்டாதாரர்களின் நிலங்கள் மற்றும் கொளத்தூர் பிரதான சாலையின் இருமருங்கிலும், பெருமாள் தாங்கல் ஏரி அரசு நீர்நிலைகளில் 53 ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது.
சென்னை மாவட்ட ஆட்சியரின் மூலம் ஒன்பது பட்டா நிலங்களின் உரிமையாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதன்மூலம் நிலங்களை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியால், நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவரை 2021 ஜூலை 16, 2021 ஆகஸ்ட் 16 மற்றும் 2021 அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் மூன்று முறை அறிவிப்பு சார்பு செய்யப்பட்டது.
இறுதி அறிவிப்பு சார்பு செய்யப்பட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்ய மறுத்ததால், அங்கிருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புக்கள் டிசம்பர் 18ஆம் தேதி அன்று அகற்றப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் வீடு எரிந்து சாம்பல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பத்தினர்