சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி நியமித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்திய, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தேர்தல் அலுலர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த 26ஆம் தேதி சுற்றறிக்கையும் அனுப்பியிருந்தார். இந்த அறிக்கையின் படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நியமனம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி பிறப்பித்துள்ள உத்தரவில், "33 உதவி வருவாய் அலுவலர்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 முதல் 7 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டாஸ்மாக் பார் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்