கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய 6.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, பேட்டரியால் இயங்கும் 100 கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 65% பேர் ஆறு மண்டலங்களில் தான் உள்ளனர். குறிப்பாக அதிகம் பாதிப்புக்குள்ளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிகளைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட நடவடிக்கையாக இக்குழுக்கள் மூலம் அப்பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அளித்து வருகிறோம். இதற்காக இளவயது தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீர் குழாய் இணைப்பு இல்லாத இடங்களில், சின்டெக்ஸ் தொட்டிகள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிகளில் இருக்கும் 1.75 லட்சம் மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கி வருகிறோம்.
தொற்று பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய மாநகரம் முழுவதும் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 22,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 22,000 படுக்கைகள் அடுத்த 20 நாட்களுக்குள் தயாராகிவிடும். மேற்குறிப்பிட்ட 6 மண்டலங்களில் மாநகராட்சி எடுத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலைகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை - தனிக்குழு அமைக்கக் கோரிக்கை!