பொதுமுடக்கம் அமலில் உள்ளபோதும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. மேலும், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வும் மேற்கொண்டனர். அவ்வாறு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடங்கி ஜனவரி 8 தேதி வரை, மொத்தம் ரூ.3.48 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அபராதத் தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல என்றும், பொதுமக்கள் தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு ’2ஜிபி டேட்டா’ - அரசாணை வெளியிட்ட உயர்கல்வித்துறை!