சென்னை: சென்னை மாநகராட்சியில், 2016க்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை மறைமுகமாகவே வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த பிரியாராஜன் மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனால், இந்தாண்டு வரவு - செலவு திட்ட கணக்கையும் (பட்ஜெட்), கடந்தாண்டு வரவு - செலவு கணக்கையும் மேயர் முன்னிலையில் வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டம் இன்று (ஏப். 9) காலை 10.00 மணிக்கு மாநகராட்சி மாமன்ற கூடத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து அன்றைய தினமே வரவு-செலவு திட்டத்தின் மீது மன்றத்தில் விவாதம் நடைபெறும் எனவும் கூட்ட இறுதியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், சென்னை மாநகர மக்கள் மத்தியில் புதிய நலத்திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்ப்புகள் மிகுதியாக உள்ளது.
தமிழ்நாடு அரசு உயர்த்திய சொத்து வரிக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் மக்களிடம் கருத்துகேட்க வேண்டும் என்ற தீர்மானம் மாமன்றத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிலங்களை சொந்தமாகவும் மற்றும் தற்காலிக அடிப்படையில் வழங்குவது தொடர்பான 7-க்கும் மேற்பட்ட தீர்மான பொருள்கள் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு விவாதிக்கப்பட உள்ளது. அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்துள்ளனர்.
இதையும் படிங்க: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி