சென்னை ஆர்.ஏ. புரத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தனது உறவினரை திருவான்மியூருக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு விடுவதற்காகச் சென்றுள்ளார். அவரை இறக்கிவிட்டு எல்.பி. சாலை வழியாக திரும்பி கொண்டிருக்கும்போது, திடீரென்று அவர் இருசக்கர வாகனத்தை ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், கத்தியைக் காட்டிமிரட்டி வினோத் குமார் அணிந்திருந்த நான்கு சவரன் நகை, அவரிடம் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து வினோத் குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பவம் இடத்தில் இருந்த சிசிடிவியை கொண்டு குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண் மூலம் அவர்களை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விக்ரம், தினேஷ், சிவா, நவீன், பார்த்திபன் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் திருவான்மியூர், தரமணி, கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களும், 4.5 சவரன் நகை, 1 செல்போன் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.