சென்னை: புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையர் அலுவலகத்தில், பெண் காவலர்கள், பெண் ஆய்வாளர்கள் என சுமார் 4 ஆயிரத்து 800 பெண் காவல் ஆளிநர்களுக்கு சமநிலை வாழ்க்கை முறை குறித்த இரண்டு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சி வகுப்பு
இதில், கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “பணி சுமைக்கிடையில் ஏற்படும் மன அழுத்தத்தை இலகுவாக்கும் வழிமுறைகளை இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் கற்றுக்கொடுக்கப்படும்.
இந்த வகுப்பு குறித்த கருத்துக்களை காவல் ஆளிநர்கள் தெரிவிக்கலாம். அதை, தானே நேரடியாக பார்வையிட்டு அடுத்தபடியாக இந்த வகுப்புகளில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.
70 ரவுடிகள் கைது
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரவுடிகள் அட்டகாசத்தை ஒழிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்படவுள்ளது.
நேற்று (செப்.24) நடைபெற்ற ஸ்டிங் ஆப்பரேஷனை பொறுத்தவரை சென்னையில் 717 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில், சுமார் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை அதிரடி செயல்
அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 3 மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், சென்னையில் கொலை சம்பவங்கள் முன்பைவிட குறைந்துள்ளது.
குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் வண்ணாரப்பேட்டையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 30 ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்களிடம் விசாரித்துவருகிறோம்” என்றார்
இதையும் படிங்க: தவறான தகவலை கொடுத்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு