சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்லாம் அமைப்பினர் நேற்று இரவு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து போராட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்தத் தாக்குதலில் இணை ஆணையர் விஜயகுமாரி உட்பட 3 காவல்துறையினர் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டம், தடியடி காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் போராட்டம் தொடர்பாக காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.