தேர்தல் நேரங்களில் மட்டும் ஒருவரின் அரசியல் பாதைக்கு பலரும் உரிமைகோருவது தமிழ்நாட்டில் வழக்கமாகிவிட்டது. அவர்தான் அதிமுக நிறுவனரும், மூன்று முறை தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சருமான எம்ஜிஆர். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்ஜிஆர் என பிரகடனப்படுத்திக் கொண்டார். ஆனால், அரசியலில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
எம்ஜிஆரை தனது அரசியல் ஆசானாக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதாவுக்கு கூட எம்ஜிஆர் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. எம்ஜிஆர் இறந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த பிம்பத்தை வைத்து பலரும் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். புதிதாக கட்சி தொடங்கவிருக்கும் ரஜினி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய கமல் வரை, எம்ஜிஆர் பெயரை வைத்து மக்களைச் சென்றடைய நினைக்கின்றனர்.
மக்களுக்கு அரசியல் தெளிவு ஏற்பட்டு, எம்ஜிஆர் அரசியலின் வலிமை குறைந்துவரும் இந்த சூழலிலும், எது எம்ஜிஆரின் பிம்பத்தை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது?
எம்ஜிஆரும் பாஜகவும்:
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை தொடங்கியுள்ள வேளையில், பாஜக, ரஜினி, கமல் என பலரும் எம்ஜிஆருக்கு உரிமை கொண்டாடுவது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்கும் என அதிமுகவினர் அச்சப்படுகின்றனர்.
எம்ஜிஆர் பிம்பத்தை அபகரிக்கும் போட்டியில் கடைசியாக களமிறங்கியிருக்கிறது பாஜக. வேல் யாத்திரை மற்றும் பிற பரப்புரைகளில் எம்ஜிஆரை பாஜக பயன்படுத்துகிறது. இதன்மூலம் எம்ஜிஆர் என்கிற பெயர் அனைவருக்கும் பொதுவானது, அது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சொந்தமானதல்ல என பாஜக பிரகடனப்படுத்தி வருகிறது.
எம்ஜிஆரை உரிமைகோருபவர்களை அதிமுக விமர்சிப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெண்கள் மீது பெரும் அக்கறை கொண்டவர் எம்ஜிஆர் என்பது அனைவரும் அறிந்ததே. மோடியும் பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். பாரத ரத்னா விருது பெற்ற எம்ஜிஆர் நம் தேசத்தின் சொத்து என்கிறார் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன்.
சிவாஜியும் நான்தான், எம்ஜிஆரும் நான்தான்:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகக் கூறிய ரஜினி, சரியில்லாத சிஸ்டத்தை சரிசெய்ய அரசியலுக்கு வருவேன் என்றார். தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய அவர், நான் எம்ஜிஆர் அல்ல. ஆனால், நான் வழங்கப்போகும் ஆட்சி எம்ஜிஆர் ஆட்சி. எம்ஜிஆரின் பாதையை பின்பற்றி அரசியல் செய்வேன் என்றார். ரஜினி ரசிகர்களும் அவரை எம்ஜிஆரோடு ஒப்பிட தவறவில்லை.
எம்ஜிஆரும் நம்மவரும்:
அரசியலில் குதித்த கமல்ஹாசன், எம்ஜிஆரை உரிமைகோர எனக்கு உரிமை உள்ளது. நான் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் என்கிறார். பரப்புரைக்கு செல்லும் இடங்களில் எம்ஜிஆர் பெயரை குறிப்பிட மறப்பதில்லை.
காந்தி என் தாத்தா, நான் எம்ஜிஆரின் வழித்தோன்றல். மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் எம்ஜிஆர் பொதுவானவர். எம்ஜிஆர் மனிதருள் மாணிக்கம், தேர்தலுக்காக அவர் பெயரை நான் பயன்படுத்தவில்லை. எங்கள் கட்சியின் முழக்கமே ‘நாளை நமதே’ (எம்ஜிஆர் படத்தின் பெயர்). எம்ஜிஆர் போலவே ஏழைகள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நாங்கள் என தனது சமீபத்திய பரப்புரையில் கமல்ஹாசன் கூறினார்.
கட்சி தொடங்கியவர்கள், தொடங்கப்போகிறவர்கள் என எம்ஜிஆரை ஆளாளுக்கு ஒருபுறம் உரிமை கொண்டாட, இதுபற்றிய அரசியல் விமர்சகர்கள் பார்வை வேறு விதமாக இருக்கிறது. மூன்று முறை முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சி இல்லை. எம்ஜிஆர் ஆட்சி என்பது போலீஸின் ஆட்சி, அன்று மாணவர்கள் பதற்றமான சூழ்நிலையில் இருந்தார்கள்.
எம்ஜிஆர் தொண்டர்கள் அவர் திட்டத்தில் பெரிதென கொண்டாடும் மதிய உணவு திட்டம்கூட காமராஜர் அறிமுகம் செய்த திட்டத்தின் நீட்சியே. இப்படி பல குறைபாடுகள் உள்ளது. எனவே எம்ஜிஆருக்கு உரிமை கோருவது, கானல்நீரை துரத்துவதற்கு சமம் என்கிறார் மெட்ராஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ராமு மணிவண்ணன் (அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாக துறைத் தலைவர்).