சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவர்களான குணசீலன், பாலாஜி ஆகிய இருவரும் இந்திய பல் மருத்துவர்கள் ஆராய்ச்சி சங்கம் மற்றும் சர்வதேச பல் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு, பார்சிலோனாவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் மருத்துவர் குணசீலன் கலந்துகொண்டு நாடு திரும்பிய நிலையில், அவரது நண்பரான மருத்துவர் கிஷோர் நாயக் என்பவருக்கு வந்த மின்னஞ்சலில், குணசீலனைப் பற்றி அவதூறான செய்திகள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து, அவர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர், மின்னஞ்சலை உருவாக்கிய பாலாஜி மருத்துவமனையின் ஊழியர் ஜெயப்பிரகாஷ், மருத்துவர் பாலாஜி ஆகியோர் மீது அவதூறு பரப்புதல், தவறான தகவலைப் பரப்பி மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி மருத்துவர் பாலாஜி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்திலும் அவரது மேல் முறையீடு மனு தள்ளுபடியானது. பாலாஜி, ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு எதிரான வழக்கு சைதாப்பேட்டை 11ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, நேரில் ஆஜராகி இருந்த இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் அடுத்தக்கட்ட விசாரணைக்காக
நவம்பர் 11ஆம் தேதி ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; உயிர் பிழைக்க மாடியிலிருந்து குதித்த இளைஞர்!