தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, கடலூர், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்தது. மேலும் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு மத்திய வங்கக் கடலில் அக்டோபர் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
மேலும் வட தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் கடைகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மழையால் பட்டாசு விற்பனையிலும் மந்தம் ஏற்படும் என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.